வெள்ளி, 1 ஏப்ரல், 2011

சுவிற்சர்லாந்து அணு உலை அலுவலகத்தில் வெடித்தது பார்செல் வெடிகுண்டு!

சுவிற்சர்லாந்தின், ஓல்ட்டன் நகரில் அமைந்திருக்கும் அணு உலை ஆராய்ச்சி மைய அலுவலகத்தில் திடீரென வெடி குண்டு பொதி ஒன்று வெடித்ததால், இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓல்ட்டன் நகரின் காமர்ஷியல் கட்டிடத்தொகுதி ஒன்றின்  நான்காவது மாடியில் அமைந்துள்ள, குறித்த அணு உலை ஆராய்ச்சி அலுவலகத்தில் இச்சம்பவம் நேற்று பகல் நடந்துள்ளது. இப்பொதியினை திறக்க முற்பட்ட, 'சுவிஸ் நியூக்கிளியர்' ஐ சேர்ந்த ஒரு பெண்மணியும், அருகிலிருந்த மற்றுமொரு ஆடவரும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்தனர். மேலும், அருகிலிருந்த வங்கியும் சேதமடைந்துள்ளது.
இதை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பொலிஸார், வேறு வெடிகுண்டு பொதிகள் உள்ளனவா என தீவிர சோதனை நடத்தினர். நாட்டுக்கு தேவையான ஒரு பகுதி மின்சாரத்தை, தனது அணு உலைகள் மூலமாக தானே உற்பத்தி செய்து வருகிறது சுவிற்சர்லாந்து. இவ் அணு உலைகளை நிர்வகித்து வரும் முக்கிய பொறுப்பு சுவிஸ் நியூக்கிளியரிடம் இருக்கிறது. ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி என்பவற்றால், அங்கிருந்த அணு உலைகள் பாதிக்கப்பட்டு ஆபத்தான கதிர்வீச்சை பரப்பத்தொடங்கியதிலிருந்து, சுவிற்சர்லாந்திலும் அணு உலைகள் இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தலாம் என அதற்கெதிரான பிரச்சாரம் வலுவடையத்தொடங்கியது. நேற்றைய வெடிண்டு பொதி தாக்குதலுக்கும் சிலவேளை, அணு உலைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் குழுவினர் காரணமாக இருக்கலாம் என அவதானிகள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக