திங்கள், 28 மார்ச், 2011

யாழ்ப்பாணத்தில் அடித்துக் துவைத்து வீதியில் வீசப்பட்ட ஆசிரியர் மரணம்!


பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரான ஆசிரியர் ஒருவர் நேற்று முன்தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குப்பிளானைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன் (வயது 28) என்ற இவர் சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியர் ஆவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
ஆசிரியரான சத்திதரன் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குப்பிளானிலுள்ள தமது வீட்டிலிருந்து தாயாருக்கு மருந்து வாங்குவதற் காக மாலை 5.30 மணியளவில் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்துள்ளார். அங்கு நண்பருடன் இணைந்து சில மணிநேரத்தைக் கழித்துள்ளார்.
பின்னர் பலாலி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தனியாகப் பயணித்துள்ளார். திருநெல்வேலியில் பழைய பிரதேச செயலகத்திற்கு அருகில் இவரை இராணுவத்தினர் மறித்து விசாரணை செய்துள்ளனர். அவ்வேளை அங்கு ஒரு முறுகல் நிலைமை ஏற்பட்டதாகத் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அங்கு மக்கள் கூடியுள்ளனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அருகிலுள்ள மஞ்சமுன்னா தடியை முறித்து மிரட்டியதைத் தொடர்ந்து மக்கள் கலைந்துசென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார் என்பது குறித்துத் தெரியவில்லை.
அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் பிரஸ்தாப ஆசிரியர் சுயநினைவு இல்லாத நிலையில் 119 அவசர அம்புலன்ஸ் மூலம் யாழ். ஆஸ்பத்திரிக்கு எடுத்துவரப்பட்டார். அங்கு அவர் விபத்தில் சிக்கிக் காயமடைந்ததாகத் தெரிவித்தே அனுமதிக்கப்பட்டார். உடனடியாக ஆசிரியர் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடலில் உள்ளாடையைத் தவிர வேறெந்த ஆடைகளும் இல்லாத நிலையிலேயே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் எனக் கூறப்பட்டது.
தொடர்ந்து சுயநினைவில்லாமல் இருந்த பிரஸ்தாப ஆசிரியர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் சிகிச்சை பயனின்றி மரணமானார்.
இவரது முதுகுப்புறத்தில் வயரினால் தாக்கியமைக்கான காயங்கள் காணப்படுவதுடன் தலையில் பலமாகத் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் (காயங்கள்) உள்ளன என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்தில் காயமடைந்தமைக்கான எந்தவித அடையாளங்களும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
யாழ்.நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா யாழ்.ஆஸ்பத்திரியில் மரண விசாரணைகளை நடத்தினார். சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக