
யாழ்.பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. பேரவை உறுப்பினர்களின் தெரிவுப்படி பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 14 வாக்குகளைப் பெற்று முன்னிலையிலும், பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், தற்போதைய பதில் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் ஆகியோர் தலா 9 வாக்குகளைப் பெற்று அடுத்த நிலையிலும் தெரிவு பெற்றிருந்தனர்.
நடைமுறையின் பிரகாரம் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களின் பெயர்களை பல்கலைக்கழகப் பேரவை பரிந்துரைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபார்சுக்காக அனுப்பி வைத்தது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபார்சின் பின்னர் துணைவேந்தர் ஒருவரை ஜனாதிபதியே நியமிப்பார்.மிக நீண்ட காலமாக : மாதக்கணக்கில் இந்நியமனம் இடம்பெறாமல், பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது, அதன் பின் கடந்த வருட இறுதியில் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் பதில் துணைவேந்தராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் நியமிக்கப்பட்டிருந்தார். இருந்த போதிலும் நிரந்தரமாக ஒரு துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக பல்வேறு ஊகங்களும் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தன.
இந்நிலையில் -
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டிருப்பதாக இன்று மதியமளவில் பல்கலைக்கழகப் பதில் பதிவாளருக்குக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மிக நீண்டகாலமாக யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உயிர் இரசாயன வியற்றுறையில் விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகின்றார். பேராசிரியர் அரசரட்ணம் கல்விப்புலம் கொண்ட பேராசிரியராகவும், பல வெளிநாட்டு புலமைபரிசில்களைக் கொண்ட ஒருவராகவும் திகழ்பவர். உயிர் இரசாயனவியற்றுறையில் பல வெளியீடுகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக