செவ்வாய், 22 மார்ச், 2011

அதிசயம் ஆனால் உண்மை-ஐந்து தலை நாகம் ஆருடம் சொல்கிறது!

சேலத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது பங்களா காடு கிராமம். பெயரை போலவே தனக்குள் பல வியப்பான விஷயங்களை வைத்திருக்கிறது இந்த ஊர். சரபங்க நதிக்கரை, பழமையான சுயம்பு நாதேஸ்வரர் கோயில்,  ஊரின் எல்லையில் இருக்கும் பாப்பார முனியப்பன், அடர்ந்த புதர் இவை தான் பங்களா காட்டின் பிரதான அடையாளங்கள். ஆனால் இப்போதோ குளத்தில் கொட்டிக் கிடக்கும் புதையலும், ஆரூடம் சொல்லும் ஐந்து தலை நாகமும் தான் ஊரை தூக்கி பிடித்திருக்கிறது. பக்கத்து கிராமங்களில் கூட இந்த இரண்டு விஷயங்களும் பரவியிருப்பதால் பங்களா காட்டை வியப்போடு பார்த்து செல்கிறார்கள். குளத்தில் பொக்கிஷம், ஐந்து தலை நாகம் இவற்றின் பின்னணியில் ஆச்சரியத்திற்கு குறைவில்லை.
ஊரில் அமைந்திருக்கும் சுயம்பு நாதேஸ்வரர் கோயில் சற்று பாழடைந்த நிலையில் இருக்கிறது. இக்கோயிலில் இருக்கும் பழைய குளத்தில் தான் கணக்கற்ற அளவில் பொக்கிஷங்கள் குவிந்து கிடப்பதாக கூறுகிறார்கள் ஊர்வாசிகள். தங்க புதையலோடு, கோயிலுக்கு உரிய உற்சவரும் குளத்தில் புதைந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஐந்து தலை நாகம் ஒன்று அடிக்கடி தோன்றி குளத்தில் புதையல் இருப்பதை உணர்த்தி விட்டு செல்கிறது என்று சொல்லப்படுவது வியப்பின் உச்சம். ஐந்து தலை நாகத்தை பார்த்ததாக ஊர்மக்கள் பலர் பயபக்தியோடு சொல்கிறார்கள். ‘கண்ணிமைக்கும் நேரம் தாங்க தெரியும். சட்டுனு மறைஞ்சிடும்‘ என்றே அவர்கள் சொல்கின்றனர். குளத்தில் புதையலும், உற்சவர் விக்ரகமும் இருக்கிறது என்பது கூறப்பட்ட நாள் முதல் கோயிலுக்கு வெளியூர்க்காரர்கள் படையெடுப்பு அதிகரித்துள்ளது. அவர்கள் குளத்தை வியப்போடு பார்த்து வணங்கி செல்வதாக கூறுகின்றனர் பங்களா காடு வாசிகள்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்புதான் குளத்துக்குள் பொக்கிஷம் இருப்பது தெரியவந்தாக கிராம மக்கள் சொல்கின்றனர். இது குறித்து ஊர் பெரியவர் ராம சாமி கூறும்போது, ‘2 வருஷத்துக்கு முன்னாடி, இதே சுயம்பு நாதேஸ்வர் கோயிலுக்கு சிவப்பு புடவை கட்டிட்டு நெத்தி நிறைய பட்டை, கழுத்துல ருத்ராட்ச மாலை சகிதமா ஒரு அம்மா வந்தாங்க. அவங்களுக்கு 60 வயசு இருக்கும். மத்தியான பூஜை முடிஞ்சதும் அந்த அம்மாவுக்கு திடீர்னு சாமி அருள் வந்து ஆட ஆரம்பிச்சுட்டாங்க. ‘இங்க இருக்கிற பாழடைஞ்ச குளத்தில கோயிலோட உற்சவரும், பல்லாயிரம் கோடி  மதிப்புள்ள தங்கப் புதையலும் மறைஞ்சு கிடக்கு..! அதை மீட்டெடுத்து கோயில்ல வச்சு வழிபட்டா இந்த ஊருக்கும், ஜனங்களுக்கும் நல்ல காலம் பொறக்கும்! ஓம் நமச்சிவாயா‘..னு சொல்லிட்டு மயங்கி விழுந்துட்டாங்க. அப்போ ஆறடி நீளத்தில ஐந்து தலை நாகம் ஒண்ணு சர்ருன்னு எங்க முன்னாடி வந்து நின்னுது. கண்ண மூடித்  திறக்கறதுக்குள்ள மாயமாயிடுச்சு‘‘ என்றார் ராமசாமி அதே வியப்போடு.

‘‘பிரிட்டீஷ் காரங்க காலத்துல பொன்னு விளையற பூமியா இந்த மண்ணு இருந்திருக்கு. இங்க இருக்குற குளத்தில அவங்க மறச்சு வச்ச பல அரிய பொக்கிஷங்கள், புதையல்களோட எங்க நாதேஸ்வரரும் புதைஞ்சு கிடக்கறதுக்கான தடயங்கள் நிறைய இருக்கு. தூய ஆத்மாக்கள் சஞ்சரிக்கும் இந்த மண்ணுல, அஞ்சு தலை ஆதிசேஷன் அடிக்கடி எங்க கண்ணு முன்னாடி வந்து இதை நினைவுபடுத்திக்கிட்டே இருக்கு. சாமி குறி சொன்ன நாளில் இருந்து தினமும் பூஜை நடத்திட்டு வாறோம். சீக்கிரம் புதையலை மீட்டெடுப்போம்’ என்கிறார்கள் கிராம மக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக