திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்கிராமம் ஆன திரியாய் பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கடந்த மாதத்தில் கொல்லப்பட்டும் பல வீடுகள் யானைகளின் தாக்குதலில் சேதப்படுத்தப்பட்டும் நெல்வயல்கள் அழிக்கப்பட்டும் வந்தது.
இந்நிலையில் பகல் வேளையிலும் காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து இலங்கை இராணுவம், வனபாதுகாப்பு பிரிவினர் இணைந்து நேற்று சனிக்கிழமை யானைகளை காடுகளுக்குள் துரத்தும் பாரிய நடவடிக்கை ஒன்றை நாள்முழுவதும் நடத்தினர். இதில் கிராம மக்களும் இணைந்து கொண்டனர்.
திருகோணமலையின் எல்லைக்கிராமம் ஆன திரியாய் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இனவன்முறைகளால் முற்றாக பாதிக்கப்பட்டு தமிழ் மக்கள் அனைவராலும் கைவிடப்பட்டு காடாக மாறிய நிலையில் காணப்பட்டது.
திரியாயில் திருகோணமலையின் பூர்வகுடிகளான குளக்கோட்ட மகாராசன் கால தூயதமிழ் மக்கள் வாழ்ந்தனர் என்பது வரலாறு. எனினும் 70 களின் பிற்பகுதியில் திருகோணமலையில் ஏற்பட்ட கொடூரமான இன அழிப்பு வன்முறைகளில் இக்கிராமத்தை சேர்ந்த 1000 கணக்கான தமிழர்கள் உயிரிழந்தும் அதற்கும் அதிகமானவர்கள் தமது உறுப்புகளையும் உடமைகளை இழந்தும் முல்லைத்தீவு மற்றும் யாழ்.மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்திருந்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இடம்பெயர்ந்த திரியாய் மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தமது வாழ்விடங்களை அடையாளம் கண்டு குடியேறி விவசாய நடவடிக்கைளையும் ஆரம்பித்திருந்த இவ்வேளையில் யானைகளின் அட்டகாசம் கிராமத்தை மீண்டும் குழப்ப நிலமைக்கு இட்டுச்சென்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக