கவிதை-சிறுகதை-கட்டுரை


ஆதலால் மறுக்கப்பட்டது

அல்லை தர்மினி-
ஒரு கடதாசி
எல்லைகள் தாண்டித்தாண்டித் துரத்தி வருவதை
அனுபவித்தீர்களா?

அக்கடதாசி
உங்கள் பெயரும் பிறப்பும் ஊரும்
குலைத்து                                                                                                           

தனித்து நிறுத்துமென அறிவீர்களா?


எதிர்பாராத நேரத்தில்
பெயரென்ன என்று குழம்பியதுண்டா?


சில விண்ணப்பங்கள் பயமுறுத்துவதை
கடதாசியொன்று
பைத்தியமாக்கிக் கொண்டிருப்பதை
மூளையைத் தள்ளி வைத்துப் பரிசோதித்ததுண்டா?


படிவங்கள்
உங்கள் தலை கழற்றி,
கீழ் மேலாய்ச் சுழற்றி
‘சைபர்’ என்று விசுக்கியெறிந்ததை
முண்டமாகக் குப்புறக் கிடந்து
பொறுக்கியதுண்டா?


அடிக்கடி மறக்க வைக்கும் கையெழுத்து
அகதியென்பதை மறுதலிக்கும் நீதிமன்றங்கள்
காசு …….


கடதாசிகள் துரத்தித் துரத்திக் கனவை மெலிவிக்க
ஓடும் எல்லைகளிலிருந்து
பாம்பின் படர் தோல் கழற்றி,

ஊர்ந்து,அரைந்து  உருமாறுதல் அறிந்திருப்பீராயின்,
ஒரு கடதாசியும்  எண்கள் பொறித்தமுத்திரையும்
துரத்தும் காட்சியொன்றைக் கண்டதாக
எவருடனாவது கதைத்திருப்பீர்கள்.

காத்திருப்பை ஒரு கவிதையாற் தின்று விடுதல்!

                                                                                                                  அல்லை ர்மினி

என் இதயத்தை வருடி
மிதந்து வரும் சொற்களால்
தானொரு
குழைந்து போன உயிரியாகிச் சொல்லப்பட்டது.
“மீண்டும் சற்று நேரத்தில் பேசலாம்”
அவ்வார்த்தைகளின் சத்தத்தில்
வோட்காவால் பியரால் வைனால் மற்றும்
இன்னபிற
எனக்குப் போதை தரும் பொருட்களால் தமிழ் ஒலித்தது.
சமையலை விரைந்து செய்து
அவசரமாய்ப் பாத்திரங்கள் கழுவி
புத்துணர்வுடன் பேசவென
வெதுவெதுப்பான குளியலொன்றை
முணுமுணுப்பான பாடல்களுடன் முடித்து
முகத்தில் வாசனை தடவி
பேசிடக் காத்திருக்க,
வீடு உறங்க
ஊரும் நிசந்து இருளானது.
நான் மட்டும் தனித்திருந்தேன்.
நேரம் பறத்தலைத் தாண்டியொரு
அழைப்பொலியில்லை.
மறந்து போனது ,                                                                                                             நித்திரையினாலோ
தோழர்களுடன் உரையாடுதலிலோ
அல்லது
அலுப்பான அழைப்பாக அலட்சியம் செய்தலிலோ
என் காதுகள் சொற்களின் கிறக்கத்துக்காக…
காத்திருத்தலை
இன்றே தின்று விடும் வேகமாகக் காத்திருக்க,
உறக்கமின்றி
நள்ளிரவு முடிந்து
அடுத்த நாளும் ஆரம்பித்து
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு
சுற்றி வந்து கொண்டிருந்தன கூட்டினுள்ளே கம்பிகள்.
நேரம் தாண்டிப் போய்க் கொண்டேயிருக்க…
ஒரு கவிதையை எழுதாமல்                 காத்திருத்தலையோ                                                                                                               நிறைவு செய்ய முடியவில்லை.
அல்லைப்பிட்டி
******************
என் இனிய ஊரே, என் இலங்கை நாடே
என்னை நீ மறந்தாயா
நான் உன்னை மறவேனே!

இது நமது நாடு, எம் ஈழநாடு, நாம் பிறந்த நாடு, என் தாய்க்கு ஈடாக யாரும் இருக்கமுடியுமா! அதுபோல் தான் என் தாய் திரு நாட்டிற்கு ஈடாக எந்த நாடும் வராது. என் வாழ்நாளின் முடிவு கூட அந்த மண்ணில் தான் நடக்கவேண்டும். என்றும், அந்த மண்ணில் மிதித்த பின் தான் என் மூச்சு அடங்கவேண்டும், எண்ணும் அளவிற்கு என் நாட்டை நேசிக்கின்றேன்.

எமது தாய் நாட்டு மண்ணில் நிற்பது தான் சுயமரியாதை, சுதந்திரம் என்பது உண்மையாகும். எமது நாட்டு வாழ்க்கை தான் நான் விரும்பும் வாழ்க்கை, எமது நாடு தான் நான் விரும்பும் நாடு என்பதில் ஆட்சரியமில்லை.

என் எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே என்றால் அது எனது பிறந்த மண்ணும், நான் பிறந்து வளர்ந்த கிராமமுமாகிய அல்லைப்பிட்டிதான்.

அழகிய ஊர்
எனது சொர்க்கம் அல்லைப்பிட்டிதான்
எனது உயிரே அல்லைப்பிட்டிதான்
எனது சுவாசக்காற்று வழிமண்டலமே அல்லைப்பிட்டி தான்
எனது உறவென்ன, வாழ்வென்ன, நட்பென்ன
என் நினைப்பே அல்லைப்பிட்டிதான் ஏன்!
நான் பிறந்த கிராமம், நாம் பிறந்த மண், நான் விளையாடிய மண்,
நான் ஓடிய மண், ஆனா என்று எழுதிய மண்.
இதனால் என் மண்ணை, எனது நாட்டை மறவேன்.

அல்லை மண்ணே
அலைகடல் போன்ற கும்பிமண்ணே
அலைகடலே
அல்லி ஆண்ட மண்ணே
மூன்று பக்கமும் கடல்
மூன்று மதத்தின் கோவில்கள்
மூன்று மரங்களின் நிழல்கள்
பனை, தென்னை, வேம்பு என.
மறப்பேனா உன்னை,

இதமான காற்று, தென்றல் காற்று
வளமான காற்று வாடைக்காற்று
பொலமான காற்று சோழகக்காற்று
இதை நான் எங்கு காண்பேன்.

அன்புள்ள ஊர் அல்லைப்பிட்டி
நட்புள்ள ஊர் அல்லைப்பிட்டி
நின்மதியுள்ள ஊர் அல்லைப்பிட்டி

இனி எங்கு நான் தேடுவேன்
இறைவா!
இனியாவது நாம் போய் சில நாட்கள் நின்று வர
அருள் புரிவாயா!
…………………………….

அல்லைஅருள் தெய்வேந்திரன் சுவிஸ்
கவிஞர், சோதிடர், எழுத்தாளர்.



என்னையும் வளர்த்தனர்
***********************

யாழ்ப்பாணத்தில்
பொமரேனியன் குரைக்கும் போது
எங்கள் பணக்காரத்தனஞ் சத்தமிட்டுச் சொல்லப்படும்.

எலும்பும் சதையுமாகச் சாப்பாடு
சீமெந்தும் கம்பியுமாக
வீடு போல கூடு
சடைசடையாகத் தொங்கும் ஷம்போவின் பளபளப்பு.

பக்கத்து வீட்டு நாயின் குரல் கேட்டு
மதில் பிராண்டும்
வீதிப் புழுதியில் விளையாடும் ஒல்லி நாயிடம் போக(த்)
தாவித்தாவிக் கம்பிக் கதவிற் குதிக்கும்.
அப்போதெல்லாம்
பக்கத்து நகருக்கு(க்)
கழுத்திற் சங்கிலி கட்டிக் கூட்டிப்போவோம்.
அது இன்னொரு பொமரேனியன் வீடு.
சில நாட்களில் கொண்டு வரப்படும்
பின் பொமரேனியன் குட்டிகளாகப் போடும்.

இப்போது நாம்
ஐரோப்பிய நகரமொன்றில்
நாய் வளர்ப்புக்கு இடமில்லை வீட்டில்.
வயசு வந்த பெண்பிள்ளை என்னை
வீட்டில் வைத்திருக்கப் பயமாம்.
பக்கத்து நாட்டிலுள்ள
மச்சானுக்குக் கல்யாணங் கட்டி வைக்க(க்)
கலப்பில்லாத என்னினத்துக் குழந்தைகளை(ப்)
பெற்றெடுக்கின்றேன்.
_____________________________
அல்லை தர்மினி


அல்லை ஊர்
........................................................................................................................................
அலைகள் வந்து தாலாட்டும் அல்லைஊராம்
ஆவினங்கள் பால் மழையாய்ப் பொழியும் ஊராம்
வெள்ளைமணற் பரப்பாகி விரிந்த ஊராம்
வேளாண்மை தனில் என்றும் உயர்ந்த ஊராம்
புள்ளி மயில் வேலவனும் துள்ளி ஆடி
புனித திருத்தலங்கள் அங்கு நிறைந்ந ஊராம்
மூன்றுமுடி அம்மனுடன் முருகனும் சேர்ந்து
முன்னின்று வரவேற்கும் சிறந்த ஊராம்
தேவாலயங்களுடன் தேன் சொரியும்
பூமரங்கள் மாமரங்கள் நிறைந்த ஊராம்
கடல் வளமும் கனிவளமும் கொண்ட ஊராம்
கல்விமான்கள் பலரையுமே ஈன்ற ஊராம்
தென்றல் வந்து தாலாட்டும் சிறிய ஊராம் 
தேசியத்தின் கற்பகதரு நிறைந்த ஊராம்
அல்லி ராணி அரசாண்ட அழகு ஊராம்
ஆனந்தமாய் புள்ளினங்கள் பாடும் ஊராம்
சின்னச் சின்னக் குருவிகளும் சிரித்துப் பேசி
சிங்காரமாய்ப் பறந்திருக்கும் அல்லை ஊராம்
கிளிகள் வந்து பழங்கள் உண்டு கிசுகிசுக்குமே
குயில்கள் அங்கு போட்டி போட்டுப் பாட்டிசைக்குமே
பன்னிரண்டு மாதங்களும் பயிர் செழிக்குமே
மண்ணின் வளம் அனைவரையும் மயங்க வைக்குமே
நெற்பயிர்கள் விளைந்து அங்கு நெஞ்சை ஈர்க்குமே
நேசம் நிறை மக்கள் அன்பு மனிதம் காட்டுமே
கவிஞர்களை ஈன்ற அந்த அல்லை ஊரிலே
காவலுக்கு வைரவரும் ஐயனாருமே
கைகோர்த்து நின்று அங்கு கருணை காட்டவே
மெல்லியதாய் இசைவழங்கி கடலின் அலைகள்தான்
மெதுவாக இசைபாடி இன்பம் ஊட்டுமே
இத்தனையும் நிறைந்த அந்த இனிய ஊரையே
இனி எழுத எனக்கு இங்கு அறிவு போதாது

திருமதி: அம்பிகா இராஜலிங்கம்         
சுவிஸ் (அல்லை).





விலங்குப்பெண்ணே(சிறுகதை)


ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்திரெண்டாம் ஆண்டு நான் ஏழாவது வகுப்பில் பாஸாகி எட்டாம் வகுப்புக்குச் சென்றேன். சென்ற ஆண்டு இறுதிப் பரீட்சையில் சித்தியடையாத பழைய எட்டாவது வகுப்பு மாணவன் ஒருவன் இப்பொழுது எங்களுடன் மறுபடியும் எட்டாம் வகுப்பில் படிக்கத் தொடங்கினான். எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் அதிக தலைமுடியுடன் காணப்பட்டோம். இருவரும் சீத்தைத் துணியில் தைக்கப்பட்ட பூப்போட்ட சட்டைகளும் ப்ளுரில் துணியில் காற்சட்டைகளும் அணிந்திருந்தோம். இருவருமே வேதக்காரர்கள். அதாவது A B C D எனப் பிரிக்கப்படடிருந்த எட்டாவது வகுப்பில் நான்கு பரிவுகளிலும் நாங்கள் இருவர் மட்டுமே வேதக்காரர்கள். எல்லாவற்றையும்விட எங்கள் இருவரது பெயர்களும் ஒன்றாகவிருந்தன. நான் ஜெ.அன்ரனி, அவன் ம.அன்ரனி.

ம.அன்ரனியை நான் முன்பே பாடசாலை வளவுக்குள்ளும் தெருவிலும் சந்தித்திருந்த போதிலும் அவனுடன் பேசியதில்லை. அவன் ஒரு நெடு நெடுவென வளர்ந்தவன். ஆனால் மிகவும் ஒல்லியானவன். எப்போதுமே நோயாளி போலவே காணப்படுவான். அவன் இப்போது வகுப்பறையின் கடைசி வாங்கினை என்னுடன் பகிர்ந்து கொண்டான். நான் படிப்பிலே மத்திமமான மாணவன் என்ற போதிலும் உயரம் அதிகமாகையால் கடைசி வாங்கிலே தான் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

வகுப்புகள் தொடங்கிய அன்று முதலாவது பாடம் சமயம். இந்து சமய ஆசிரியர் ஜெகசோதி வகுப்புக்குள் வந்துவிட்டார். வந்தவரத்தில் பாடத்தையும் ஆரம்பித்துவிட்டார். எங்கள் வகுப்பில் மிக அழகாகப் பாடக்கூடிய பெண்ணொருத்தியிருந்தாள். அவளுக்கு நாங்கள் கே.பி.சுந்தராம்பாள் என்று பட்டம் கூட வைத்திருந்தோம். அவளை அழைத்து வாத்தியார் ஒரு தேவாரம் பாடச் சொன்னவுடன் அவள் பாட ஆரம்பித்தாள். ம.அன்ரனியின் பெயரில் இருந்து அவனும் கிறிஸ்தவன்தான் என்பது எனக்குத் தெரியும். அவனைப் பார்த்தேன். அவன் கண்களை மூடிக்கொண்டிருந்தான். முன்னைய வருடங்களின் அனுபவங்களின் போது முதல்நாள் சமய வகுப்பில் இந்து சமய வாத்தியார் “வகுப்பில் யாராவது வேதக்காரர்கள் இருக்கிறார்களா?” எனக் கேட்பார். நான் எழுந்து நிற்பேன். “போய் அசெம்பளி ஹோலில் இரு கிறிஸ்தவ சமயத்தைக் கற்பிக்க ஆசிரியர் வருவார்” என்பார். நானும் மூன்று வருடங்களாக தட்டத் தனிய அசெம்பிளி ஹோலில் காத்திருக்கிறேன். வேதக்கார வாத்தியார் வந்தபாடில்லை. இவ்வளவுக்கும் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த ஒரு வாத்தியார் எங்கள் பாடசாலையில் இருந்தார். அவர் சமூகக் கல்வியும் ஆங்கிலமும் கற்றுக் கொடுத்துவந்தார். மற்றைய நேரங்களில் புகைப்படம் பிடிப்பது தபால் தலைகள் விற்பது போன்ற உபதொழில்களையும் மேற்கொண்டு வந்தார். நான் எழுந்து ஜெகசோதி வாத்தியாரிடம் “சேர் நான் கிறிஸ்தவ சமயம்” என்று அறிவித்தேன். “வேறு யாராவது கிறிஸ்தவர்கள் வகுப்பில் இருக்கிறார்களா?” என வாத்தியார் கேட்டார். ம.அன்ரனியும் எழுந்து நின்றான். வாத்தியார் எங்கள் இருவரையும் அசெம்பிளி ஹோலுக்கு அனுப்பினார்.

நாங்கள் இருவரும் அசெம்பிளி ஹோலில் போய் ஒரு மூலையில் இருந்தோம். சற்று நேரத்தில் அவ்வழியால் சென்ற அதிபர் ‘ஏன் இங்கு இருக்கிறீர்கள்?” எனக் கேட்டார். “கிறிஸ்தவ சமயப் பாடம்” என்றேன். “இருங்கள் மாஸ்டர் வருவார்” என்று கூறிவிட்டுச் சென்றார். நான் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்து விலகும் வரை கிறிஸ்தவ சமய ஆசிரியர் வரவேயில்லை. ம.அன்ரனியிடம் நான் பேசிய முதல் வார்த்தை “என்ன உடம்பு சுகமில்லையா?” என்பதாய் இருந்தது. அவன் எனக்கு கூறிய முதல் மறுமொழி “பசிக்குது” என்பதாய் இருந்தது. அதிர்ந்து போய்விட்டேன்.

பசியைப் பார்த்து நான் அதிர்ந்து போகவில்லை. எனக்குப் பசி நினைவு தெரிந்த நாளில் இருந்தே மிகவும் பழக்கமானது. அது என் வயிற்றிலேயே குடியிருக்கும் மிருகம். அந்தக் கொடிய மிருகம் என் வயிற்றை எப்போதும் விறாண்டிக்கொண்டேயிருந்தது. பசி எனது கற்பனையில் தேவாங்குக்கும் நரிக்கும் நடுவிலான உடலெல்லாம் புசுபுசுவென ரோமங்கள் கொண்ட ஓர் வெண்ணிற மிருகமாய் இருந்தது. ஆனால் பசிக்கிறது என்பதை வீட்டை விட்டு வெளியே வந்தால் மற்றவர்களிடம் சொல்ல முடியுமா?. ம.அந்தோனி என்னிடம் சொல்கிறான்.! அதுதான் என் அதிர்வுக்கு காரணம். முதலாம் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது புவனம் ரீச்சர் மாணவர்களிடம் “இன்று என்ன சாப்பிட்டீர்கள்?” என வகுப்பில் கேட்பார். அப்போதெல்லாம் இந்தக் கேள்வியளவுக்கு இன்னொரு கேள்வி என்னைப் பயமுறுத்தியதில்லை. அநேகமாகக் காலையில் வீட்டில் சாப்பாடு இருக்காது. சில நாட்களில் கிடைக்கும். அது திறிபோசா மாவுருண்டையாக இருக்கும். எனினும் நான் “இன்று இடியப்பமும் சம்பலும், மீனும் சாப்பிட்டேன்.” என்று வகுப்பில் பொய் சொல்வேன். அநேகமாக இந்தச் சமூகத்தில் நான் சொன்ன முதல் பொய் அதுவாகத்தான் இருக்கக்கூடும்.

இப்பொழுது எனது மூத்த சகோதரன் ஊரில் ஒரு தேநீர்க் கடையில் வேலை செய்ததால் காலையில் ஒரு றாத்தல் பாண் பெறக் கூடியதாக இருந்தது. நாங்கள் நான்கு பிள்ளைகளும் பகிர்ந்து சாப்பிடுவோம். கடைசித் தம்பிக்கும் தங்கச்சிக்கும் அச்சுப்பாணில் இருக்கும் கருகிய ஓரப்பகுதி பிடிக்காது. அதை அம்மாவுக்குக் கொடுப்பார்கள். ஆனால் எனக்கு பண்டிகை நாட்களின் மறுநாட்களைத் தவிர அல்லது பப்பா கொழும்பில் இருந்து வந்து ஊரில் நிற்கும் ஆரம்ப நாட்களைத் தவிர மற்றைய நாட்களில் பாடசாலைக்கு கட்டிக்கொண்ட போகச் சாப்பாடு கிடைக்காது. சில நேரங்களில் எப்படியாவது ஒரு இருபத்தைந்து சதம் கிடைத்துவிடும். அதற்கு கார்த்திகேசு கடையில் ஒரு ஐஸ்பழம் வாங்கிச் சூப்பலாம். பசி அடங்கிய மாதிரித் தோன்றும். பகல் ஒருமணிக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கும்போது காத்திருந்த மிருகம் வயிற்றுக்குள் கடித்துக் குதறத் தொடங்கும். எனினும் நான் எப்போதும் என் பசியை வீட்டுக்கு வெளியே யாரிடமும் சொன்னதில்லை. எனது வகுப்புத் தோழர்களுக்கு எனது கொட்டில் வீட்டை கல் வீடு எனவும், எங்களிடம் வரதலிங்கம் மாஸ்டரிடம் உள்ளதை விடத் திறமான வி.எஸ்.ஏ மோட்டார் சைக்கிள் இருக்கிறது எனவும், கொழும்பில் யாழ்தேவி புகையிரதத்தில் லேஞ்சி போட்டு சீட் பிடித்து அதை ஒரு ரூபாவுக்கும் இரண்டு ரூபாவுக்கும் விற்கும் என் பப்பாவை அரசாங்க அதிகாரி என்றும் புளுகி வந்தேன். இதில் பப்பாவின் உத்தியோகத்தை அடிக்கடி மாற்றிக் கூறிவந்ததற்கு எனது மறதி ஒரு காரணம். என் பப்பா கஸ்டம்ஸ், பொலிஸ், மாஸ்டர் என்று பல்வேறு பதவிகளை என் புண்ணியத்தில் வகித்து வந்தார்.

முக்கியமாக நான் மதிய இடைவேளையில் பட்டினியாய் இருப்பதை யாருக்கும் காட்டிக்கொள்வதில்லை. மதிய உணவு மணி அடித்ததும் வகுப்பறையில் இருந்து வெளியே வந்து மைதானத்திலோ வீதியிலோ சுற்றுவேன். என்னைத் தவிர என் வகுப்பில் இருந்த மற்றவர்கள் எல்லோரும் மதியச் சாப்பாடு கட்டிக்கொண்டு வருபவர்களே. அதிலும் சிலருக்கு பத்து மணிக்கு விடும் “சோர்ட் இன்ரெவலில்” கூட கன்ரினில் வடையும் வாய்ப்பனும் சாப்பிடும் அளவுக்கு வசதி இருந்தது. வகுப்பில் பாடங்களைக் கவனிப்பதைவிட என் வயிற்றில் வாழும் விலங்கை அடக்குவதிலும் எனது “பவரை”க் காட்டுவதற்கு என்னென்ன பொய் சொல்லலாம் என்று சிந்திப்பதிலுமே எனது பள்ளிக் காலம் கழிந்தது.

ம.அன்ரனியிடம் இந்தப் பேச்சுக்கே இடமில்லை. அவன் பசியைக் கண்டு ஒழியவில்லை. அதை நேருக்கு நேரே சந்தித்தான். தன் வறுமையைக் கண்டு அவன் வெட்கப்படவில்லை. அதை எனக்குத் தெட்டத் தெளிவாய் அறிவித்தான்.இப்பொழுதெல்லாம் மதிய உணவு மணி அடித்ததும் நானும் ம.அன்ரனியும் தெருவுக்கு வருவோம். அவன் பசியை தணிப்பதற்கு சில உத்திகள் வைத்திருந்தான். பாடசாலையிலிருந்து வங்களாவடிக்கு போகும் வீதியின் இருமருங்கிலும் கிளுவை மரங்கள் நிறைந்திருக்கும். நாங்கள் கிளுவங்காய்களைப் பறித்துத் தின்போம். மயிலப்புலம், சோளாவத்தைப் பகுதிகளில் புல்லாந்திச் செடிகள் காணக்கிடைக்கும். அவற்றின் சின்னஞ் சிறிய பழங்களைப் பிடுங்கித் தின்போம். நாகதாளிப் செடிகளில் பழங்கள் பிடுங்கி நட்சத்திர முள்ளைக் கவனமாக அகற்றி ம.அன்ரனி எனக்குச் சாப்பிடத் தருவான். புல்லாந்திப் பழத்தையும் கிளுவம் பழத்தையும் சாப்பிட்டுவிட்டு என்னத்தைப் படிப்பது? மனம் முழுவதும் சுவையான உணவுகளைப் பற்றிய கற்பனையிலேயே மிதந்து கொண்டிருக்கும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்வரை பாடசாலையில் பிஸ்கட் தருவார்கள், இப்போது இந்தப் பெரிய பாடசாலைக்கு வந்த பின்பு அதுவுமில்லை. யோசித்து பார்க்கும்போது பெயில் விட்டு பெயில் விட்டு ஐந்தாம் வகுப்பிலேயே இருந்திருக்கலாம் என்றிருக்கும்.

எங்களுக்கு கணிதம் படிப்பித்த வாத்தியாருக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். அவருக்கு பொடியள் எட்டுஸ்ரீ என்று பட்டம் வைத்திருந்தார்கள். அதாவது எங்கள் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருக்கு எட்டாயிரம் ரூபாய்கள் லஞ்சம் கொடுத்து அவர் இந்த வாத்தியார் வேலையைப் பெற்றுக்கொண்டாராம். எங்கள் பாடசாலையில் மூன்று ஸ்ரீயிலிருந்து இருபது ஸ்ரீ வரை பல ஆசிரியர்கள் இருந்தார்கள். எட்டு ஸ்ரீக்கு கணித மாஸ்டர் வேலையைவிட கராட்டி மாஸ்டர் வேலைதான் மிகப் பொருத்தமாய் இருந்திருக்கும். ஆள் நுள்ளான். ஆனால் எங்களுக்கு அடிக்கும்போது எதிரிக்கு அடிப்பதுபோல்தான் அடிப்பார். ஆனால் அவர் எங்கள் வகுப்பிலேயே மிகவும் அமைதியாகவும் சிவப்பு நிறமாயும் காணப்படும் மணிமேகலைக்கு என்றுமே அடித்ததில்லை. பின்பு பத்தாவது படிக்கும்போது எட்டுஸ்ரீ மணிமேகலையைக் கூட்டிக்கொண்டு ஒடிவிட்டார். பொலிசுக்காரர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்து போனார்கள். ஒருமுறை பசி மயக்கத்தில் இருந்த ம.அன்ரனியை எட்டு ஸ்ரீ அடித்த அடியில் ம.அன்ரனி மயங்கி விழுந்துவிட்டான். இன்னொரு தடவை விஞ்ஞான டீச்சர் மிஸிஸ் இராசையா பிடித்து அவனை உலுக்கி “ஏனடா நித்திரை கொள்ளவா இங்கே வருகிறாய்?” என்று கேட்டபோது ம.அன்ரனி மரமாய் நின்றிருந்தான். “போய் உங்கள் சாதித்தொழிலைப் பார், உனக்கு எதற்கு சயன்ஸ்?” என்று மிஸிஸ் கந்தையா கேட்டார். வகுப்பில் இருந்த எல்லோருடைய சாதி விபரங்களையும் மிஸிஸ் கந்தையா விரல் நுனியில் வைத்திருந்தார். எப்படி இந்த சாதி விபரங்களை திரட்டினார் என்பது தெரியவில்லை. விஞ்ஞான டீச்சர்! அவருக்க தெரியாத விதிகளா? பரிசோதனை முறைகளா? ஏதாவது ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருப்பார்.

கொடுமை, கொடுமையென்று கோயிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை அவிழ்த்துப் போட்டு ஆடிய கதையாய் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் “வைட் அண்ட் வைட்” போட்டுக்கொண்டு வரவேண்டும் என்றொரு அவசர சட்டம் பாடசாலையில் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முதற் சற்பிரசாதத்துக்காகத் தைக்கப்பட்ட எனது வெள்ளைச் சட்டை எனக்கு இப்போது அளவாக இராது. அதை என் தம்பி போட்டிருக்கிறான். அவனிடம் கெஞ்சி மன்றாடி வெள்ளிக்கிழமைகளில் அச்சட்டையைப் போட்டுக்கொண்டேன். அந்த வெள்ளைச் சட்டை தொப்புள் வரைதான் வரும். அடிக்கடி கீழே இழுத்துவிட்டு சமாளிக்க வேண்டியிருந்தது. வெள்ளைக் காற்சட்டை கிடைக்கவில்லை. அதற்குப் பப்பா கொழும்பிலிருந்து வரும் வரை பொறுத்திருக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை காலைகளில் ஒரு வெறிநாயின் மூர்க்கத்துடன் அதிபர் பாடசாலையின் முன்வாசலில் நின்றிருப்பார். “வைட் அண்ட் வைட்” போட்டு வராத மாணவர்களின் குண்டிகள் அவரின் பிரம்பால் பழுத்தன. நான் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு மட்டம் போடத் தொடங்கினேன். என் வீட்டு நிலைமை தெரியாத மாணவர்கள் திங்கட்கிழமை காலையில் “பள்ளிக்குக் கள்ளம் பழஞ்சோத்துக்குக் காவல்” என்று பொருத்தமில்லாமல் என்னைப் பழிக்கத் தொடங்கினர். ஆனால் ம.அன்ரனி வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலைக்கு போனான். அவனிடமும் “வைட் அண்ட் வைட்” கிடையாது. ஆனால் அவன் அதிபரின் அடியை ஏற்றுக்கொண்டான். அவனுக்கு எதையும் நேருக்கு நேர் சந்தித்துத்தான் பழக்கம். இப்படியான சில விறுமத்தடியன்களை அடித்தும் உதைத்தும் பார்த்துத் தோல்வி கண்ட அதிபர் இறுதியில் அவர்களை “வைட் அண்ட் வைட்” போடும்வரை வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு வரக்கூடாது எனத் தீர்ப்பிட்டார்.

ஒருமுறை பெரிய வியாழன் அன்று நானும் ம.அன்ரனியும் சின்னமடு தேவாலயத்திற்கு ஒரு திட்டத்துடன் சென்றிருந்தோம். அவன் சின்னமடு ஆலயப்பங்கைச் சேர்ந்தவன். இயேசுக்கிறிஸ்து சீடர்களுடன் அருந்திய கடைசி இராப்போசன விருந்தைப் பெரிய வியாழன் அன்று கொண்டாடுவார்கள். அன்று பன்னிரண்டு சீடர்களின் கால்களையும் வாசனைத் திரவியங்களாலும் பன்னீராலும் இயேசு கழுவி அவர்களுக்கு விருந்தளித்தாராம். அதை நினைவு கூரும் முகமாக பாதிரி பன்னிரெண்டு சிறுவர்களது கால்களைப் பச்சைத் தண்ணீரால் கழுவிவிட்டு ஆளுக்கு ஒரு றாத்தல் பாண் கொடுப்பான். நாங்கள் இருவரும் சின்னமடு மாதாவுக்கு வைத்த நேர்த்தி வீண்போகவில்லை. அன்றிரவு என் வயிற்றினுள் கிடந்த மிருகம் உறங்கிற்று.

சுகாதாரப் பாடத்தில் உணவு - சமிபாடு - பெருங்குடல் - சிறுகுடல் - குதம் என்று ஆசிரியர் படம் போட்டுக் காட்டி விளக்குகையில் நான் அந்தப் படத்தில் பசியைத் தேடிக்கொண்டிருந்தேன். நமது தொண்டையில் இருந்து குதம் வரையான ஒரு பௌதிகச் செயற்பாடு எப்படி மண்டை, காது, உள்ளங்கால்கள், விதைகள், ஆணுறுப்பு, பற்கள் என எல்லாவற்றிலும் சுண்டி இழுத்து வதைக்கின்றது என்பது எனக்குப் புரியவே இல்லை.

நான் ம.அன்ரனி எல்லோருமே எங்கள் ஆண்டிறுதிப் பரீட்சையில் வெற்றி பெற்றோம் என அறிவிக்கப்பட்டது. நாங்கள் ஒன்பதாம் வகுப்புக்குச் சென்றோம். ஆனால் ம.அன்ரனி ஒன்பதாம் வகுப்புக்கு வரவில்லை. அவன் பாடசாலைக்கு வராமல் நின்று கொண்டான்; நான் சின்னமடுவுக்குச் சென்று தேடினேன். யாழ்ப்பாணத்தில் வேலை செய்யப் போய்விட்டான் என்ற தகவல் கிடைத்தது. சில மாதங்களுக்குப் பின் நான் பனங்கிழங்கை விற்பதற்காக யாழ் நகரச் சந்தைக்குச் சென்றிருந்தேன். அம்மா நூறு பனங்கிழங்குகளை ஒரு உரப்பையில் போட்டுக் கட்டித் தந்திருந்தார். அப்போது நுறு பனங்கிழங்குகள் ஐந்து ரூபாய். எனக்கு அம்மாவிடமிருந்து ஐம்பது சதம் கொமிசன் போடப்பட்டிருந்தது. மணல் ஏற்றிப் போகும் ட்ரக்டரில் கிழங்குகளோடு ஏறிப் போய்விட்டேன். வழியெல்லாம் என் கொமிசன் ஐம்பது சதத்தை எப்படியெல்லாம் செலவழிப்பது என்று திட்டம் போட்டுக்கொண்டே சென்றேன். கடைசியில் கொஞ்சம் திராட்சைப் பழங்கள் வாங்கி சாப்பிடலாமென முடிவு செய்தேன்.யாழ் பஸ் நிலையத்தின் முன்பாக வரிசையாகத் தேநீர்க் கடைகள் இருந்தன. அவற்றில் குலைகுலையாக திராட்சைப் பழங்கள் தொங்கின. ஐம்பது சதத்திற்கு தருவார்களா என்பது தெரியவில்லை. கேட்கவும் பயமாக இருந்தது. கடைகளைப் பார்த்துக் கொண்டே தயங்கித் தயங்கி நடக்கும் போதுதான் ம.அன்ரனியைக் கண்டேன். ம.அன்ரனி “ரஜினி கூல் பாரில்” மேசை துடைக்கும் வேலையில் இருந்தான். அழுக்கான சறமும், பனியனும் அணிந்திருந்தான். அவன் இப்போது கொஞ்சம் உடம்பு தெளிந்திருந்தான். அப்போது எனக்கு ஒரு ஆசை எழுந்தது. நானும் அவனுடன் வேலையில் சேர்ந்துவிடுவதென முடிவெடுத்தேன். “எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்?” என ம.அன்ரனியிடம் கேட்டேன். சாப்பாடு மட்டும்தானாம். தீபாவளிக்கு ஒருசோடி உடுப்பு கொடுத்தார்களாம். மற்றப்படி சம்பளம் ஏதும் இல்லையாம். அங்கு வேலை செய்தால் வடை வாய்ப்பன் என்று விதவிதமாக சாப்பிடலாம் என்று தோன்றியது. முதலாளாளியோடு எனது வேலை விசயமாகப் பேசுவதாகவும் அடுத்த கிழமை வந்து தன்னைச் சந்திக்குமாறும் ம.அன்ரனி சொன்னான். அடுத்த கிழமை நான் போனபோது அந்தக் கடை எரிந்து கிடந்தது.அந்தக் கடைத் தொடரையே இராணுவம் எரித்து நாசப்படுத்தியிருந்தது.

ஆயிரத்துதொளாயிரத்து எண்பத்து அய்ந்தாம் ஆண்டின் கடைசிப்பகுதி என நினைக்கிறேன். கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து பழவந்தாங்கல் இரயில் நிலையத்திற்குச் சென்றேன். நிலையத்தில் இறங்கி நண்பன் ஒருவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். அந்த இடத்தில் நான் ம.அன்ரனியை எதிர்பார்க்கவில்லை. என்னைக் கண்டவுடன் ம.அன்ரனி என் கைகளைப் பிடித்துக் கொண்டான் “எப்படி இருக்கிறீர்கள் தோழர்?” என்று சுகம் கேட்டான். அவன் நின்றிருந்த பழவந்தாங்கல் ஏரியா, அவனின் இளந்தாடி, அவன் என்னைத் தோழர் என்று சிநேகிதமாய் அழைத்த முறை இவற்றை வைத்து அவன் என்ன இயக்கத்திற்கு வேலை செய்கிறான் என்று கணக்குப் போட்டேன். கணக்குத் தப்பவில்லை. அவன் கள்ளங் கபடம் இல்லாமல் தன்னுடைய இயக்கம் பற்றிக் கூறினான். என்னைப் பற்றிக் கேட்டான். “வெளிநாடு செல்வதற்காக வந்துள்ளேன்” என்று பச்சைப் பொய் சொன்னேன். அவன் என்னை ஆச்சரியத்தோடு கண்கள் சுருங்கப் பார்த்தான். அவன் கண்களில் இருந்தது ஏளனமா, இல்லை ஏக்கமா என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை. பணம் ஏதும் இருந்தால் கொடுக்கும்படியும் தானும் சில தோழர்களும் இரண்டு நாட்களாய் பட்டினியாய் கிடப்பதாயும் ம.அன்ரனி சொன்னான். நான் அவனுடன் அதிகம் பேச விரும்பவில்லை. பணமும் கொடுக்கவில்லை.

ஆயிரத்துதொளாயிரத்து எண்பத்தொன்பதாம் ஆண்டு நான் கொழும்பில் தங்குமிடமோ, சாப்பாடோ இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன். என் வயிற்றுக்குள் இருக்கும் அக் கொடிய மிருகமும் என்னைப் போலவே வளர்ந்திருந்தது. அந்த விலங்கு என்னைத் தின்று கொண்டிருந்த அந்தக் கணத்தில் நான் ம.அன்ரனி பற்றிய ஒரு செய்தியை அவனின் படத்துடன் பத்திரிகையில் படித்தேன்.வவுனியா காவலரணில் இருந்த ம.அன்ரனி மறைந்திருந்த சுடப்பட்ட “சினைப்பர்” தாக்குதலில் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்டபோது அவன் திறந்த ஜீப்பினுள் அமர்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறான். அவனது இரத்தமயமான உடல் சோற்றுப் பருக்கைகளுக்கு நடுவே கிடந்ததாம். மறுபடியும் மறுபடியும் பத்தரிகைச் செய்தியைத் திருப்பித் திருப்பிப் படித்துப் பார்த்தேன். அவனில் வயிற்றில் குண்டு பாய்ந்திருப்பதாகவும் அவனுக்கு வயது இருபத்திரெண்டு எனவும் சூடுபட்ட உடனேயே அவனது உயிர் பிரிந்து விட்டது எனவும் எல்லாவற்றையும் விளக்கமாகப் பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். ஆனால் அவனின் வயிற்றினுள் இருந்த அந்த தேவாங்குக்கும் நரிக்கும் இடையேயான புசுபுசுவென்ற வெண் மயிர்கள் கொண்ட மிருகத்தைப் பற்றிய செய்திகள், குறிப்புகள் எதுவும் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை.

அல்லை திரு J.அன்ரனிதாசன்
-----------------------------------------------------------------------------------------------
நீள்கூந்தலும் நிலந்தேய ஆடைகளும்!!!
                               அல்லையூர் தர்மினி


லாச்சாரக் காவிகளாகப் பெண்கள் மட்டுமே உடையலங்காரம், தலையலங்காரம், பண்பாடு என்ற பெயரில் பழமை பேணுதல் , பாசாங்கான புறவடையாளங்கள், அச்சமூகத்தின் பிரதிநிதிகளாகப் பெண்கள் இருக்கவேண்டுமெனக் கதைத்தல்கள், கட்டளைகள் என்று  மதம், குடும்பங்களினூடாக வற்புறுத்தப் படுகின்றது.
பிரித்தானியக் காலனியின் கீழ் படிப்பு, பதவி , நாகரிகம் என்பவற்றைக் காரணங்களாகக் கொண்டு உடைகள் ,தலையலங்காரம் ,காலணிகளை ஆண்கள் மாற்றிக் கொண்டதைப் போல பெண்கள் நவீனத்துவத்தைக் கடைப்பிடிக்க சமூகம் விடவில்லை. இன்று வரை தமது கலாச்சாரப் பண்பாட்டுப் பிரதிநிதிகளாகப் பெண்களை வைத்திருப்பது, ஆண்களுக்கும் ,  அதிகாரத்திற்கும் வசதியாகவேயுள்ளது. நீள்கூந்தலும் நிலந்தேய உடைகளுமாக நடமாட நம் போலித்தனமான சுற்றம் வெருட்டுகின்றது. காலமாற்றத்திற்கும் காலநிலைகளுக்கும் மாறிக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயங்கள் கூட புலம் பெயர்ந்து மற்றைய சமூகத்தினருடன் கலந்து வாழும் போதும், தாய்நாட்டில் வாழும் போதும் ஏற்பட்டாலும் கடவுளை மறுக்க நடுங்கும் மிரட்சி போல, பழகி விட்ட ஒன்றை விட்டுவிடுதலில் தோன்றும் பூதம் தின்று விடும் என்ற சின்னப்பிள்ளைத் தனமான பயத்தைப் போன்றததுமாகும். தங்களுக்குக் கொஞ்சங் கூடப் பிரயோசனம் அற்றதும் வீண்வேலைகள் என அறிந்தும் இவர்கள் அவற்றைப் பின்பற்றுகின்றனர்.
சமீபத்தில், இந்துசமயத்தையும்-பண்பாடு கலாச்சாரத்தையும் போலி யாழ்ப்பாணக் கலாச்சாரக் காவலாளர்களும் சட்டம் போட்டுக் காப்பாற்றும் வரலாற்றுக் கடமையைச் செய்கிறார்கள்.இந்த ஆக்கம் அதைப்பற்றிப் பேசாமல் அதைத் தொட்டு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் போலிக் கலாச்சார மினக்கெடல்கள் பற்றிக் கொஞ்சம் கதைப்பதாக இருக்கும்.
உண்மையாகவே மனமகிழ்வை அளிக்கும் செயல்களிலோ உடலைப் பேண உதவும் உடைகளிலோ ஈடுபாடு காட்டாமல் வெற்றுச் சம்பிரதாயங்கள் , சடங்குகள், பழக்கவழக்கங்களைக் காவிக் கொண்டு வந்து புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் நேரம், பணம்,சக்தி என்பவற்றை விரயஞ் செய்கின்றனர் தமிழர்கள். இவர்கள் மற்றைய சமூகத்தினரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளத் தம் பாரம்பரியக் கலைகள் எதையும் கைவசம் வைத்திருப்பதில்லை. இங்கு பிறந்து வளரும் தமிழ்ச் சமூகத்துக்குக் கற்பிக்கும் இசை,நடனம், கவின்கலைக் கருவிகள் கூட ஒருவருக்கொருவர் கௌரவப் பிரச்சனை, போட்டி மனப்பான்மையுடன் தம் பிள்ளைகளுக்குக் கற்பித்தலிலும் ஒரு அரங்கேற்றத்துடனும் முற்றுப் பெற்று விடுகின்றன. அவற்றை உள் வாங்கி வெளிப்படுத்த முடிவதில்லை.
அவர்களை விட்டுவிட்டால் புலம் பெயர்ந்து வாழத் தொடங்கிய முதற் தலைமுறையினர் எங்காவது ஒரு சமூக ஒன்று கூடலில் தங்களுடைய நாட்டுக் கலை என எதையும் நிகழ்த்த முடியாமல் திண்டாடி நிற்பதைப் பார்க்கலாம். ஆனால் தமிழர், தமிழ்க் கலாச்சாரம் ,பண்பாடு என வெறும் பேய்க்காட்டல்களை வைத்துக் காலந்தள்ளிக் கொண்டிருப்பது பற்றிச் சற்றும் வெட்கப் படுவதில்லை.
சமீபத்தில் நடைபெற்ற பல சமூகத்தினருக்குமான கலைகலாச்சார ஒன்றுகூடலில் நடைபெற்ற சம்பவமொன்று.
ஒவ்வொரு நாட்டவர்களிலும் யாராவது ஒருவர் நமக்குப் புதியதாக இருக்கும் அவர்களது பாரம்பரியப் பாடலைப் பாடினார்.தாளலயம் மிகுந்த இசையும் ,குழுக்களாக அவர்களது தனித்துவமிக்க நடனங்களும் எல்லோராலும் இரசிக்கப் பட்டது. தமிழர்களின் முறை வந்த போது பிறநாட்டவரைப் போன்ற பாரம்பரியப் பாடல்களையோ நடனத்தையோ வெளிப்படுத்தவில்லை.  கைவிரல்களினால் எண்ணக் கூடிய அளவிலேயே நம் நாட்டார்பாடல்களையும் கூத்தையும் இசைக்கக் கூடியவர்கள் புலம்பெயர்ந்தவர்களுக்கிடையில் இருக்கக் கூடும். ஏனைய சனங்களுக்கு அக்கலைகள் எதுவும் தெரியாது. அவர்கள் காவிக் கொண்டு வந்தவை ;   சாறி, சாமத்தியச் சடங்கு, பொட்டு, புட்டு, ஒடியற்கூழ், காசு உழைக்கும் கோயில்களும்   தான். வீண் வெளிவேடங்களில் நேரத்தைக் காசைச் செலவிடும் எங்களால் உண்மையாகவே ஒரு தனித்துவமான கலையைக் காட்சிப்படுத்த முடிவதில்லை. எதையும் கற்றுக் கொள்ளாதவர்களாகவே இருக்கின்றோம்.
இந்தியத் தமிழ்ச் சினிமாப் பாடல்களோ, அவற்றைப் பார்த்த விளைவால் ஆடும் மேலைத்தேய நடனங்களோ ஏனைய நாட்டவர்கள் மத்தியில் பாராட்டைப் பெறுவதில்லை. ஒருவர் துள்ளிசையான தமிழ்ச் சினிமாப் பாடலைப் பாடிய போது ஸ்பானிஷ் இசையின் சாயல் அடிப்பதாக அவ்விடத்திலேயே சுட்டிக்காட்டியதும் நடந்தது. அவர்களுக்குத் தமிழ் மொழி தெரியாது என்ற காரணத்தினால் ஓர் சினிமாப்பாடலைப் பாடி ஏமாற்ற முடியாது. அவை பாரம்பரியக் கலைகளினின்று விலகி நிற்பது இலகுவாகப் புலப்பட்டுவிடும்.
அங்கே கையில் எழுதி வைத்திருந்த பாடலொன்று தமிழ்ப் பெண்கள் ஐந்து பேரால் பாடத் தொடங்கப்பட்டது. அனைவரும் நாற்பத்தைந்து ஐம்பது வயதை அண்மித்தவர்களாகவே இருப்பார்கள். நான் இவர்களை விட்டுச் சற்றுத் தூரத்தில் அமர்ந்திருந்தேன். சுராங்கனி….சுராங்கனி … என்ற பாட்டைத் தவிர என் வாயிலும் ஒன்றும் வரவில்லை என்று குழம்பிக் கொண்டிருந்தேன். அவர்கள் என்ன பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றனர் என்பதையே பாடலைப்பாடும் இசையை வைத்துக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் , ஐந்து பேரிடமும் சிக்குப்பட்டு மாம்பழமாம் …மாம்பழம் என்ற வார்த்தைகள் வெளிவருவது காதுகளில் தெளிவாக விழுந்தது. அவர்கள் பாடிய விதம் சின்னவயதில் தடக்கித் தடக்கிப் பாடும் ‘ மாம்பழமாம் …மாம்பழம் மாமா தந்த மாம்பழம்’ போன்றிருப்பதாக என் ஊகம்.
ஓகோ! இவர்களும் என்னைப் போலவே வெறுத்துப் போய் வெட்கித்துத் தம்மை தாமே கிண்டல் செய்து பாடுகின்றார்களோ என்ற நினைப்பில் அவர்களுடன் சேர்ந்து அப்பாடலைப் பாடும் ஆசையுடன் எழுந்தோடினேன். இப்படிக் கிண்டலாகவாவது பாடச் சிந்தித்திருக்கிறார்களே என்று ஒரு புறம் அவர்களிடம் மதிப்பும் ஏற்பட்டது. அப்பாடலில் புதிதாக நுழைக்கப்பட்ட வார்த்தைகளை எழுதி வைத்திருக்கிறார்கள் என நினைத்து  அந்தக் கடதாசியில் எழுதியிருந்தவற்றைப் படித்த போது தான்  உண்மையாகவே அது என்ன பாடலென அடையாளங் கண்டு கொண்டேன். போன வேகத்தில் திரும்பி ஓடிவந்து என் பழைய இடத்தில் இருந்து விட்டேன்.
அது போக்கிரி படத்தில் விஜய்,அசின் வாயசைத்துப்  பாடி ஆடிய  , ‘மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் ….சேலத்து மாம்பழம் நீதானடி! ‘ அந்தப் பாட்டின் மெட்டையாவது சரியாகப் பாடியிருந்தால் அல்லது வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்திருந்தால் நான் ஏமாந்து போயிருக்க மாட்டேன்.
இவ்வாறு தான் நம் போலிக் கலாச்சாரக் கதைகள் இருக்கின்றன. மக்கள் உள்வாங்கித் தம் திறமைகளை வெளிப்படுத்தவோ எதுவுமில்லை. மனமகிழ்ச்சியளிக்கும் பாரம்பரியக் கலைகளைக் கலைஞர்களை அழித்து விட்டும் அக்கறையற்றும் இருப்பது பற்றி உணராமல் பெண்களை முடக்கும் சடங்குகள், பழக்கங்கள், பண்பாடு எனப் பாதுகாக்கச் சட்டம் போடுவதும் சதிசெய்வதும்  சிறிதும் தவறாகப் படுவதில்லை  என்பது தான் வருந்தச் செய்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக