புதன், 12 அக்டோபர், 2011

ஈழ அகதிகள் இந்தியாவிலிருந்து முதல்தடவையாக கப்பல் மூலம் திரும்புகின்றனர்

இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் முதன்முதலாக கப்பல் மூலம்  ஒக்ரோபர் 12ம் நாள்முதல்  தமது நாட்டிற்கு திரும்பி வரவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையரகம் [United Nations High Commissioner for Refugees-UNHCR] எதிர்பார்ப்பதாக இதன் பேச்சாளர் அட்றியன் எட்வேட்ஸ் ஜெனிவாவில் ஒக்ரோபர் 11, 2011 அன்று மேற்கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் அரசாங்கங்கள் இணைந்து ஈழ அகதிகளை அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் திட்டத்தின் முதற்கட்டமே இதுவாகும்.

இவ்வாறு தமது சொந்த நாட்டிற்கு மீண்டும் வரவுள்ள மக்களை வரவேற்கும் நிகழ்வானது சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், துறைமுக மற்றும் கப்பல் கட்டுமான அதிகாரிகள், UNHCR பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து கொழும்புத் துறைமுகத்தில் மேற்கொள்ளவுள்ளனர். 


இதுவரை இவ்வாறு சிறிலங்காவிற்குத் திரும்பி வரும் அகதிகள் விமானம் மூலமே கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் தமது சொந்த நாட்டிற்கு திரும்பி வரும் அகதிகளுக்கான போக்குவரத்தானது தற்போது ஒரு முன்மாதிரி நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுவதுடன், இதில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 37 அகதிகள் முதற்கட்டமாகக் கொண்டுவரப்படவுள்ளனர்.

எதுஎவ்வாறிருப்பினும், இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் தம்மிடம் வைத்துள்ள வீட்டு உடைமைகளைத் தம்முடன் எடுத்துவருவதற்காக படகுப் பயணத்தை எதிர்பார்த்திருப்பதாக அவர்கள் UNHCR இடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவ்வாறு சிறிலங்காவிற்குத் திரும்பி வரும் அகதிகள் ஒவ்வொருவரும் தம்முடன் 150 கிலோகிராம் பொருட்களை எடுத்து வரமுடியும்.

விமானம் மூலம் தமது நாட்டிற்கு திரும்பி வரும் ஈழ அகதிகள் கப்பல் மூலம் தமது போக்குவரத்தை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவே இவ்வாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி துறைமுகத்திற்கும் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்திற்கும் இடையில் வர்த்தக ரீதியான கப்பல் சேவை மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது மே 2009ல் முடிவிற்கு வந்ததிலிருந்து, வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த ஈழ அகதிகள்  தமது சொந்த நாட்டிற்கு திரும்பி வரும் எண்ணிக்கையானது தற்போது அதிகரித்துள்ளது.

இவர்களில் இந்தியாவிலிருந்து பெருமளவானவர்களும் ஏனைய நாடுகளிலிருந்து மிகக் குறைந்தளவானவர்களும் சிறிலங்காவிற்குத் திரும்பி வந்துகொண்டிருக்கின்றனர். இதுவரை இவ்வாண்டில் 1400 அகதிகளும், கடந்த ஆண்டில் 2054 அகதிகளும் சிறிலங்காவிற்கு மீண்டும் திரும்பி வந்துள்ளனர்.

தமது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வதில் ஆர்வமுடைய மக்கள் தற்போது UNHCR ஆல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டமானது தமக்குப் பெரிதும் உதவிபுரிவதாகத் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தமானது நிறைவுக்கு வந்துள்ளதன் காரணமாகவே தாம் பிரதானமாக மீண்டும் இங்கு செல்ல விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதுடன், சிறிலங்காவில் உள்ள தமது குடும்பத்தவர்கள், நண்பர்கள் ஆகியோருடன் மீண்டும் ஒன்று சேர்வதுடன், தமது நிலங்களை உரிமை கோரவும் தாம் விரும்புவதாகவும் இவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சிறிலங்காவிற்குத் தாம் மீண்டும் செல்வதால் அங்கே தமக்கான வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் உறைவிடப் பிரச்சினைகள் போன்றவற்றைத் தாம் பிரதானமாக எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையரகமானது மீளவும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் மக்களுக்கு மானியம் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் போன்றவற்றை வழங்கிவருகின்றது.

தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள 112 அகதி முகாங்களில் 69,000 ஈழ அகதிகள் வாழ்ந்து வருவதாக இந்திய அரசாங்கத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலுள்ள 65 நாடுகளில் 141,063 சிறிலங்கா அகதிகள் வாழ்வதாகவும், இதில் பெரும் பகுதியினர் இந்தியாவிலும் அதனைத் தொடர்ந்து பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, மலேசியா, அமெரிக்க மற்றும் இத்தாலி போன்ற பல நாடுகளில் வாழ்வதாகவும் அண்மையில் UNHCR ல் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக