கிளிநொச்சி பன்னங்கண்டிக் கிராமத்திலுள்ள வளவொன்றுக்குள் நேற்று முன்தினமிரவு புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் வீட்டிலிருந்தவர்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி மிக மோசமாகத்தாக்கி விட்டு சுமார் ஏழரை லட்சம் ரூபா பெறுமதியான 15 பவுண் தங்க நகைகளையும் 20,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென் றுள்ளனர்.
இரவு 10 மணியளவில் இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருபவை வருமாறு குறித்த வளவுக்குள் ஒரே உறவுக்காரர்களின் நான்கு வீடுகள் அமைந்துள்ளன.
சம்பவ தினமிரவு வீடுகளிலுள்ளவர்கள் உறங்கச் சென்ற சமயம் திடீரெனத் துப்பாக்கி மற்றும் கத்திகள் சகிதம் வீடுகளுக்குள் புகுந்த சுமார் ஆறுபேரடங்கிய கும்பல் அங்கிருந்தவர்களை மிக மோசமாகத் தாக்கியுள்ளது. ஆண்களைத் தாக்கி அவர்களைக் கட்டிப்போட்ட ஆயுததாரிகள் பெண்களைக் கீழே விழுத்தி கால்களால் கண்டபடி மிதித்து கொடுமைப்படுத்தி நகைகளைக் கழற்றி வாங்கியுள்ளனர்.
அத்துடன் நின்றுவிடாது வீடுகளிலிருந்த அனைத்துப் பொருள்களையும் கிளறியெறிந்து தேடி அங்கு வைக்கப்பட்டிருந்த 20,000 ரூபா பணத்தை எடுத்ததுடன் மீண்டும் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாகக் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கு தேடுதல் நடத்திய போது குறித்த வளவின் பின்புறத்திலிருந்து இரண்டு கூரிய கத்திகளையும், அரைக்காற்சட்டை ஒன்றையும், வெற்று மதுபானப் போத்தல்களையும் கண்டெடுத்துள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்ட ஆயுததாரிகளில் ஒருவரைத் தவிர ஏனையோர் தமது முகங் களைக் கறுப்புத்துணியால் மூடிக்கட்டியிருந்ததுடன் கறுப்பாக ஏதோ பூசியிருந்தனர். சிங் களத்திலும் தமிழிலும் சரளமாக உரையாடிய இவர்கள் அங்கிருந்த பெண்களை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டினர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, அன்றைய தினமிரவு அந்தப் பகுதியில் மேலும் ஒரு வீட்டிலும் இந்தக் கும்பல் தனது கைவரிசையைக் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து சுமார் அரைக் கிலோமீற்றர் தூரத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள நிலையில் இடம் பெற்ற இந்தக்கொள்ளையானது கிராம மக் களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் கொள்ளையர்கள் தமது கைவரிசை யைக் காட்டிவிட்டு நடந்தே சென்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
போரின் பிடியில் சிக்கி எல்லாவற்றையும் இழந்து முகாம்களில் முடக்கப்பட்ட வன்னி மக்கள் தற்போது மீள்குடியமர்வு என்ற பெயரில் தமது சொந்த இடங்களுக்குச் சென்று கொட்டில்களில் இருந்து கொண்டு தமது வாழ்வாதாரத்தைக் மீண்டும் கட்டியெழுப்பப் பிரயாசைப்படும் இச்சந்தர்ப்பத்தில் நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள் மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக