இந்திய இராணுவம் 16 நட்பு நாடுகளின் படைகளுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள போர்ப்பயிற்சியில் பங்கேற்க இலங்கை இராணுவத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 1.13 மில்லியன் படையினரைக் கொண்ட இந்திய இராணுவம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நட்பு நாடுகளுடன் இணைந்து போர்ப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது.
நட்பு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்தக்கூட்டுப் போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, மொங்கோலியா, கசாகிஸ்தான், உஸ்பெகிஸ் தான், கிர்கிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர், நேபாளம், மாலை தீவு, சிசெல்ஸ், சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய 16 நாடுகளின் இராணுவங்கள் இந்தக் கூட்டுப் போர்ப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அறுபதாண்டு கால போர் அனுபவத்தைக்கொண்டுள்ள தமது இராணுவத்துடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஏனைய நாடுகளின் இராணுவங்கள் ஆர்வமாக இருப்பதாகவும், குறிப்பாக கிராமப்புற, நகரப்புறங்களில் கிளர்ச்சி மற்றும், தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்தப்போர்ப்பயிற்சிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் அயல் நாடுகளான பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, மியான்மர் போன்றவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் இலங்கைக்கு மட்டும் இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை.
அண்மையில் திருகோணமலைக்கடற்பரப்பில் இலங்கை கடற்படையுடன் இணைந்து இந்தியக்கடற்படை போர்ப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருந்தது. ஆனால் இந்திய இராணுவம், இலங்கை இராணுவத்துக்கு கூட்டுப்போர்ப்பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்காதது சந்தேகங்களை எழுப்பியுள்ளது
இலங்கை இராணுவத்தை மையப்படுத்தியே போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதால், சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக இந்திய இராணுவம் இலங்கையைக் கழற்றி விட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக