தொடர்ந்து அவர் பேசுகையில் "2011 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இடம்பெற்ற பெரு வெள்ளத்தால் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
குடிசைகள் வெள்ளத்தில் அள்ளுப்பட்டுப் போயின. மக்கள் தங்களது ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடையை இழந்தனர். தொண்ணூறு விழுக்காடு வேளாண்மை தண்ணீருக்குள் மூழ்கியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இசைய திருகோணமலை நலம்புரிச் சங்கம், கனடா மருத்துவர் சங்கம், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற அமைப்புகளின் ஆதரவோடு 40 இலட்சம் ரூபாய்களை திரட்டி இடருதவியாகக் கொடுத்தோம். இந்த உதவி மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை, அமைதிக்கான பல்சமய அமைப்பு மற்றும் சாரதா இல்லம் ஆகியவற்றின் ஊடாக வழங்கப்பட்டது. மன்னார் மாவட்டத்துக்கு ரூபாய் 116,500 கிளிநொச்சி மாவட்டத்துக்கு ரூபாய் 440,000 கொடுத்து உதவினோம்" என்றார்.
விழாவுக்கு வருகை தந்தோரை திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு வீர. சுப்பிரமணியம் வரவேற்றுப் பேசினார்.
கனடா தமிழர் இணையத்தின் தலைவர் திரு வின். மகாலிங்கம் அவர்களின் அறத் தொண்டுக்கு மதிப்ளிப்பு முகமாக பொன்னாடை போர்த்து மேன்மைப்படுத்தப்பட்டார். அவர் பேசும் போது "மக்கள் வீண்செலவு செய்யாமல் நாளொன்றுக்கு ஒரு டொலர் வீதம் சேர்த்து வறுமையில் வாடும் எமது மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு நிரஞ்சன் நல்லவேலு பேசும்போது "எமது சங்கத்தின் செயற்பாடுகளில் தலையானது ஆதரவற்ற சிறார் இல்லங்களை நடத்தப் புரவலர்களாக இருந்து மாதம் தோறும் பணம் வழங்கி வரும் வழக்கறிஞர் பொன்னம்பலம் கயிலநாதன், வழக்கறிஞர் தில்லையம்பலம் ஜெயதீசன், மருத்துவர் ஸ்ரீ ராணி ராஜேஸ்வரன் மருத்துவர் சிறீதரன் சின்னத்துரை, பல் மருத்துவர் இருதயநாதன் விஜயநாதன் சின்னத்தம்பி இராஜகோபால் ஆகியோரது வள்ளல்தன்மையாகும்" குறிப்பிட்டார்.
முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய நக்கீரன் "கோயில்கள் இரண்டு உண்டு. ஒன்று படமாடும் கோயில். மற்றது நடமாடும் கோயில். படமாடும் கோயிலில் இருக்கும் கடவுளர்க்கு கொடுப்பது நடமாடும் கோயில் என வருணிக்கப்படும் ஏழை எளியவர்களுக்குச் சென்று சேராது. ஆனால் நடமாடும் ஏழை எளியவர்களுக்குக் கொடுத்தால் அது படமாடும் கோயிலில் இருக்கும் கடவுளர்க்கும் சென்று சேரும். இந்தப் புரட்சிகரமான கருத்தைச் சொன்னவர் திருமந்திரத்தைப் பாடிய திருமூலர் ஆவார். திருகோணமலை நலன்புரிச் சங்கம் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனக் கூடிக் கலையும் ஊர்ச்சங்கங்கள் போலல்லாது எமது தாயகத்தில் வாழும் அடிமட்ட ஆதரவற்ற மக்களுக்குத் தன்னாலான அறப்பணியை ஆற்றிவருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் தொண்டை செய்யும் உங்கள் அனைவரையும் மனதாரப் பாராட்ட விரும்புகிறேன்" என்றார்.
ரொறன்ரோவில் புகழ்பெற்ற நாட்டியப் பள்ளிகளைச் சார்ந்த நர்த்தகிகளது நடனங்கள் விழாவில் இடம்பெற்றன. நிகழ்ச்சியை தட்சணன் உதயகுமாரன் மற்றும் சிந்து அருந்தவநாதன் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக முறையே தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கினார்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக