வெள்ளி, 14 அக்டோபர், 2011

மனவளர்ச்சி குன்றிய குழந்தை பலி தூக்க மாத்திரை கலந்த ஜூஸ் குடித்து குடும்பமே தற்கொலை முயற்சி!

ஜூசில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது. தற்கொலைக்கு முயன்ற தம்பதிகள் மற்றும் அவர்களின் 10 வயது மகன் மீட்கப்பட்டுள்ளான். மயிலாப்பூர் வி.பி. கோயில் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் (38). வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி லோகநாயகி (28). தம்பதிகளுக்கு சந்தோஷ் (10) என்ற மகனும் ஜனனி (3) என்ற மகளும் உள்ளனர். ஜனனிக்கு மன வளர்ச்சியில் குறை இருந்தது. மூன்று ஆண்டாக சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் இல்லை. 

இதனால், பெற்றோர் மன வேதனையில் இருந்தனர். குழந்தையின் நிலை குறித்து, தன் நண்பர்களிடம் கூறி கன்னியப்பன் அழுது புலம்பியுள்ளார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி மாலை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓட்டலில் திருச்சி முகவரியை கொடுத்து அறை எடுத்து கன்னியப்பன் குடும்பத்துடன் தங்கினார். இரண்டு நாட்களும் நன்றாக சாப்பிட்டு மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். 



நேற்று அதிகாலை 4 மணி அளவில் குளிர்பானத்தில் தூக்க மாத்திரைகளை கலந்து மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து தானும் குடித்துள்ளார். குளிர்பானத்தை குடித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு பெற்றோரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட் டது. இதனால், சந்தேகம் அடைந்த அவன் ஜூஸ் குடிப்பதை பாதியில் நிறுத்தி விட்டான். உடனடியாக பெற்றோர் வற்புறுத்தி குடிக்க வைத்தனர். அதனை தட்டிவிட்டு தனது சித்தப்பா மோகனுக்கு போன் செய்து நடந்ததை கூறினான். 

அவர் பதறியபடி ஓட்டலுக்கு வந்தபோது, 4 பேரும் ஒரே கட்டிலில் மயக்க நிலையில் கிடந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில், குழந்தை ஜனனி வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

ஓட்டல் அறையில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். கன்னியப்பன் எழுதியுள்ள கடிதத்தில், Ôஎன் குழந்தை ஜனனி, மனவளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய நிலையை நினைத்து வேதனை அடைந்தேன். முதலில் நான் மட்டும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். நான் இறந்து விட்டால், எனது குடும்பம் அனாதையாகி விடும். தனியாக கஷ்டப்படுவார்கள். அதனால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம். எனது புகைபடத்தை பத்திரிகைகளில் வெளியிட வேண்டாம்’ என்று எழுதியுள்ளார். 

6 மாத முயற்சி

6 மாதங்களுக்கு முன்பு கன்னியப்பன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அப்போது, அம்பத்தூரில் வசித்து வரும் அவரது சகோதரி பார்வதி மயிலாப்பூர் வருவதாக போன் செய்துள்ளார். அதனால் தற்கொலை திட்டம் பலிக்கவில்லை. ஓட்டல் அறையின் 103வது அறையில் தற்கொலை முயற்சி நடந்துள்ளது. ஜூஸ் வாங்கி 4 கிளாசில் வைத்துள்ளனர். அதில், தூக்க மாத்திரையுடன் சில விஷ தன்மை உள்ள திரவ பொருட்களையும் கலந்துள்ளனர். 4ல் ஒரு டம்ளர் உடைந்து விட்டது. ஒரு டம்ளரில் பாதி அளவு ஜூஸ் இருந்தது. அதுவும் உறைந்த நிலையில் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக