யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலங்களில் நடைபெற்றுவரும் சம்பவங்களை பார்க்கின்ற போது ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற ரீதியில் துன்பமும் வேதனையும் எதிர்காலம் பற்றிய ஜயுறவும் தோன்றுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இப் பகுதியில் அரச பிரதிநிதிகள் யார்? யாரிடம் எவ்வகையான அதிகாரங்கள் உள்ளன? மக்களுக்குத்தான் இவர்கள் சேவையாற்றுகின்றார்களா? என்பவை சிக்கலான விடைகாண முடியாத வினாக்களாக எம்முள் எழுகின்றன. இப்பிரதேசம் வாழ் மக்களை அலட்சியப்படுத்தி சிக்கலுக்குள்ளாக்கி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் சிலவற்றை இங்கு வரிசைப்படுத்தலாம் என எண்ணுகின்றேன்.
01. யாழ்ப்பாண குடாநாட்டிற்கான வீதி அகலிப்பு நடைபெற்று வருகின்ற போது அதன் எதிர் விளைவுகள் பற்றி எவரும் சிந்தித்ததாக தெரியவில்லை. ‘காப்பெற்’ வீதியாக மாற்றப்படும் போது வீதியில் வாகனங்கள் தொகையாகவும், ஓட்டங்கள் வேகமாகவும், இடம்பெறும். வீதி அபிவிருத்திக்கு திட்டமிடுவோர் இவ் ஆபத்துக்களை உணர்ந்து ஏலவே வீதி ஒழுங்கு முறைகளிற்கேற்ப வீதிக் குறிகாட்டிகளை இடுவது இன்றியமையாத முதற்தேவையாகும். பாதசாரிகளுக்கான நடைபாதைக் குறிகாட்டிகள்; பொருத்தமான இடங்களில் மாநகரசபையின் ஆலோசனை பெற்று இடப்பெறுதல் வேண்டும். மேலும் வேகக்கட்டுப்பாடுகளைக் குறிக்கின்ற அறிவித்தல்கள் பாதையின் ஓரங்களில் காட்சிப்படுத்தப்படவேண்டும். நகர எல்லைக்குள் குறைந்த வேகக்கட்டுப்பாடு பேணப்படுதல் அவசியம். அவ் அறிவித்தல் இன்றும் இப் பிரதேசங்களில் இடப்படவில்லை. இதனால் பலர் தினம் தினம் உயிரிழக்க வேண்டியுள்ளது. இவ் உயிரிழப்புக்கு பொறுப்பானவர்கள் யார்? வீதி அபிவிருத்தி சபையா? உள்ளுராட்சி அமைப்புகளா? என்பது மக்களுக்கு புரியாதுள்ளது. மேலும் வீதி விளக்குகள் முறையாக பொருத்தப்பட்டிருக்கவில்லை. அவை பழுதடைந்தால் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. மின்சார இணைப்பிற்கான கேபிள்களும் தொலைத் தொடர்பி;ற்கான இணைப்புக்களும் தாறுமாறாக வீதியின் மேலே காணப்படுவதை எவரும் அவதானிக்க முடியும். மேற்கு நாடுகளில் இருப்பது போல் அழகான முறையில் ஒரு ஒழுங்கு முறையில் இவற்றை அமைத்தல்; வேண்டும். யாழ்ப்பாண நகர வீதிகளில் நின்று அண்ணார்ந்து பார்க்கும் போது தாறுமாறாக ஒழுங்கற்ற முறையில் சொற்ப அழகுணர்வும் இன்றி இவை பொருத்தப்பட்டிருப்பதை காண முடியும். இவற்றை ஒழுங்குபடுத்துபவர் யார்?
02. மின்சார வளங்களைப் பொறுத்தவரை யாழ்ப்பாணப் பிரதேச மக்கள் மிகவும் மோசமான நிலையை எய்தியுள்ளளார்கள். மின்சாரம் எப்போ வரும்? எப்போ இல்லாமல் போகும் என்பது மக்களுக்கு தெரிவதில்லை. அறிவித்தல் வந்தாலும் அதன்படி மின்சாரம் வழங்கல் இடம்பெறுவதில்லை. மேலை நாடுகளில் 1 நிமிடம் மின்சாரம் தடைப்படுதல் என்பது தலைப்புச் செய்தியாக இடம்பெறும் தன்மை வாய்ந்தது. அங்கு இயற்கை அனர்த்தங்கள் எதிர்பாராமல் ஏற்படும் போது அதுவும் சொற்ப நேரத்திற்கு தடைப்படுகின்ற நிகழ்வு ஏற்படும். யாழ்ப்பாண நகரத்தில் அபிவிருத்தி இடம்பெறுவதாகக் கூறும் அரசு மின்சார வழங்கல்களைச் சீராக்காமல் அபிவிருத்தியை எய்த முடியுமா? பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள் இருக்கும் இடங்களில் வேலை நேரங்களில் மின்சாரம் தடைப்படுவதால் கல்வி, மனிதவளம், வேலை நேரம் என்பன பெருமளவு வீணடிக்கப்படுகின்றன. மின்சாரத்தை நம்பி இருக்கும் வர்த்தக நிலையங்கள், அரச, தனியார் அலுவலகங்கள், கணனியைப்பயன்படுத்துவோர், தினசரிகளை அச்சிடுவோர் சொல்லணா துயரங்களுக்கு உட்படுகின்றனர். மின்சார சபையினர் பொறுப்புடன் நடந்து கொள்வதாகவோ, இதை உணர்வதாகத் தெரியவில்லை. மேலை நாடுகளில் மக்கள், நுகர்வோர் சங்கங்கள் ஊடாக இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யக்கூடிய நிலை உள்ளது. வீதி அபிவிருத்திக்கு மின்சார தூண்களை இடம் மாற்றும் போதோ, புதிதாக நாட்டும் போதோ அப்பகுதியை தவிர்ந்து ஏனைய பகுதிக்கு தற்காலிகமான இணைப்புகளை வழங்குவதே நடைமுறையில் உள்ள வழக்கமாகும். யாழ்ப்பாண மின்பொறியியலாளர்கள் இதுபற்றி கொஞ்சமேனும் சிந்திப்பவர்களாகத் தெரியவில்லை.
03. வீதி அபிவிருத்திப் பணிகள் இங்கு எல்லா இடங்களிலும் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் பொருத்தமான திறமை வாய்ந்த ஒப்பந்தக் காரரிடம் இவ் வேலை வழங்கப்படாமையே என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றரர்கள். இதற்கு காரணம் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல் செயற்பாட்டால் பொருத்தமற்றவர்களும், திறனற்ற நிறுவனங்களும் இதனை பெற்றுக் கொள்வதே காலதாமதத்திற்கு காரணம் என சம்மந்தப்பட்ட துறைசார்ந்தோர் குறைபட்டுக் கொள்கின்றார்கள். இதுபற்றி பொருத்தமானவர்கள் ஆழ்ந்த கவனம் எடுக்க வேண்டும்.
04. சமீபத்தில் யாழ்ப்பாண கச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள பழைய பூங்காவின் அருகில் உள்ள பிரித்தானிய கால அரச ஆளுனருக்கு சொந்தமான பழைய கட்டிடம் மாநகர சபையால் இடித்து அழிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்தன. இப் பிரதேசத்தின் அரச அதிபர் இது பற்றி தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என அறிக்கை விடுகின்றார். வடமாகாண ஆளுனர் தாம் கட்டளை இடவில்லை என்று கூறுகின்றார். ஆளுனரின் செயலாளர்கள் தமக்கு தொடர்பில்லை என சொல்கின்றனர். பொறுப்பற்ற அரச சட்டங்களுக்கு எதிரான இச் செயலுக்கு எவர் பொறுப்;பு என்பது இதுவரை தெரியவில்லை.
இலங்கையில் சட்டப்படி 100 வருடம் பழமை வாய்ந்த கட்டிடங்கள், தாவரங்கள் என்பன மரபுரிமைச் சொத்துக்களாக கணிக்கப்பட்டு அவை அழியாது பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜ.நா சபையும் இவ்வாறான மரபுரிமை சொத்துக்களை பேண வேண்டுமென சட்டம் இயற்றி வைத்துள்ளது. அதில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. எனவே பழைய பூங்காவில் நடைபெற்ற அரச சட்டத்தை மீறிய செயலுக்கு யார் பொறுப்பு? பழைய பூங்கா பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டதாக ஆவணங்களில் இருந்து தெரிய வருகின்றது. ஆனால் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்காது இருப்பது சட்டப்படியும், மரபுப் படியும் தவறாகும். பழைய பூங்காவானது அரச அதிபராக திரு கணேஸ் இருந்த காலத்தில் பழைய பூங்காவிலிருந்த 150 வருடகால பழமையான மரங்கள் தறிக்கப்பட்டு அரசாங்க அதிபரது வாசஸ்தலம் கட்டப்பட்டது. இது கட்டப்படும் போது பெறுமதி வாய்ந்த மரங்கள் பல தறிக்கப்பட்டுள்ளன. பூங்காவின் பெரும்பகுதியை இக் கட்டிடத் தொகுதி அடக்கியுள்ளது. இலங்கையின் சட்டதிட்டங்களிற்கு மாறான நடவடிக்கையே இதுவாகும். பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையிலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையிலும் வழக்கு தாக்கல் செய்து இதை செய்தவர்களை தண்டிக்கும் வாய்ப்புகள், செய்தவர் பதவியில் இல்லாத போதும் செயற்படுத்தலாம் என்பதை தற்போது பதவியில் இருப்போர் உணருதல் வேண்டும். பழைய பூங்காவின் நிலை தொடர்ந்தும் பிரச்சினைக்குரியதாகவே காணப்படுகின்றது. இங்கு நிகழும் தவறுகளுக்கு பொறுப்புக் கூறுபவர் யார் என மக்களிற்கு தெரியாதுள்ளது. பழைய பூங்கா 100 வருட பழமை வாய்ந்த சொத்தாக காணப்படுவதால் இது தொல்பொருட் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்கும், நிர்வாகத்திற்கும் உரியதாகும். எனவே இத் திணைக்களகத்தினர் இச் சம்பவத்திற்கு பதில் கூறுவதோடு இதை செய்தவர்களிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்படி விடயங்களையும் இலங்கையில் குறிப்பாக தமிழ் பிரதேசங்களில்; அரசியல் யாப்புக்கும், சட்டத்திற்கும் புறம்பாக நடக்கும் சம்பவங்கள் பலவற்றை பார்க்கும் போது அரசு தனது ஆட்சி செய்யும் திறனை இழந்துவிட்டதாகவே கூற வேண்டியுள்ளது. எதற்கும் பொறுப்பு கூறும் நிலையும் வெளிப்படையான தன்மையும், சட்டத்தின்படி ஒழுகும் பண்பும் அரசுக்கும் அரச பணியாளர்களுக்கும் இருத்தல் வேண்டும். அவ்வாறு நிர்வகிக்க முடியாத போது, நிர்வாகக் கட்டமைப்பை அரசு இழக்கும் போது அரசு தனது ஆட்சி செய்யும் திறனை இழந்துள்ளதாகக் கொள்ளப்பட்டு அதற்கு ஏற்பதான நடவடிக்கைகளை சர்வதேசங்களும் ஏனைய ஜனநாயக அரசுகளும், ஜ.நா போன்ற அமைப்புகளும் மேற்கொண்டு அந் நாட்டையும், மக்களையும் காப்பதே முறையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக