யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காணிப்பதிவு நடவடிக்கையினால் பொதுமக்கள் பலர் கதிகலங்கி உள்ளதுடன் பெரும் சிரமங்களையும் எதிர் நோக்கியுள்ளனர். எந்த விதமான அறிவித்தலுமின்றி கிராம சேவையாளர் ஊடாக விநியோகிக்கப்படும் படிவங்களைப் பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் அதனை நிரப்பிக் கொடுப்பதிலேயே முனைப்புக் காட்டுகின்றனர்.
காரணமின்றி மேற்கொள்ளப்படும் இந்தப் பதிவுகள் தொடர்பாக பொதுமக்கள் கிராம சேவையாளரிடம் விளக்கம் கேட்கும் போது அவர்களும் உரிய முறையில் பதில் அளிப்பது கிடையாது. காரணம் கிராம சேவகர்களுக்கும் இதற்கான பூரண விளக்கம் உயர் அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என்பதே ஆகும். விண்ணப்பப் படிவங்களை நிரப்பி கையளிக்கும் போது காணியின் உறுதி மற்றும் விளக்கப்படங்களையும் சேர்த்து வழங்குமாறு மக்களிடம் கேட்கப்படுகின்றது. இதன்படியே விண்ணப்பப் படிவங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இதனால் யாழ். மாவட்டத்தில் காணியுள்ள பலர் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வசித்து வருவதனால் இவர்களின் உறுதிகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இந்தப் பதிவுகளை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் பல முறை வலியுறுத்திய போதும் அரசு அதனை உதாசீனம் செய்து பதிவுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற தென்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக